தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்
தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக அஜித்குமார் (வயது 29) என்பவர் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை மாதம் அவர் மீது நிகிதா என்ற பேராசிரியை, நகை திருட்டு என முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தார்.
காவல்துறையினர்
இது தொடர்பான விசாரணைக்காக அஜித்குமாரைத் தனிப்படை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு, படுகாயமடைந்த அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரியவர, பாரிய சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அஜித்குமாரின் மரணம் தொடர்பில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மானாமதுரையைச் சேர்ந்த தனிப்படை காவல் உத்தியோகத்தர்களான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன் மற்றும் காவல்துறை வாகன சாரதி ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனு தாக்கல்
இந்தநிலையில், அஜித்குமார் மரணம் குறித்த வழக்கை சிபிஐ (CBI) விசாரித்து வருகின்றது.
சமீபத்தில் இந்த வழக்கில், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மானாமதுரை காவல்துறை டிஎஸ்பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் அதிகாரி மற்றும் துணை காவல் அதிகாரி உள்ளிட்ட மேலும் நான்கு காவல்துறையினரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால் அஜித்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஐந்து பேர் பிணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (04-02-2026) நடைபெற்ற நிலையில், அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மரண வழக்கு
இதன்போது, நீதிபதி நிகிதா அளித்த முறைப்பாடு சரியானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குச் சிபிஐ தரப்பில் நிகிதா அளித்த முறைப்பாட்டில் உண்மை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், அஜித்குமார் உயிரிழப்பு காவல் மரணம் என்பது உறுதியாகியிருக்கிறது எனச் சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கருத்துத் தெரிவித்த நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கில் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இப்படி அடித்த காவல்துறையினருக்குப் பாடம் புகட்ட வேண்டும், அஜித்குமார் மரண வழக்கில் யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை உள்ளேயே இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |