ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கமேனி சார்பில் கடும் எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரானின் உச்சத் தலைவர் முஜ்தபா கமேனியின் மூத்த ஆலோசகரான அலி அக்பர் விலாயதி, கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் “வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்புக்கு காலாவதி திகதி உண்டு” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான விலாயதி, சமூக வலைதளமான X-ல், “அண்டை நாடு தொடர்ந்து இருக்கும். விருந்தினர்கள் வெளியேறுவார்” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரானில் கடும் எதிர்ப்பு
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அபுதாபிக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, UAE ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேல் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், கடந்த சில மாதங்களாக ஈரான் மற்றும் UAE இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. ஈரான் UAE-யை நோக்கி பலமுறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, இஸ்ரேல் மற்றும் UAE இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாக வெளியான தகவல்கள் ஈரானில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின.
இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் UAE-யில் Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பையும் அதனுடன் தொடர்புடைய பணியாளர்களையும் நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தரப்பு
இதற்கிடையில், துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானத்தில் தாக்குதல் முயற்சி நடந்ததாகவும், அதில் ஈரானுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆனால், இதுவரை ஈரான் இதில் ஈடுபட்டதற்கான ஆதாரம் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
எனினும் UAE தனது நிலைப்பாட்டில், இந்தப் போரில் தாம் ஒரு தரப்பல்ல என்றும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தனது நிலப்பரப்பு, கடற்பரப்பு அல்லது வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |