இஸ்ரேல் - ஹமாஸ் போர் : கட்டாரை வாழ்த்திய சிறிலங்கா அரசாங்கம்
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையில் தொடர்ந்து வரும் போருக்கு மத்தியில், ரபா கடவையை திறக்க கட்டார் மேற்கொண்ட முயற்சிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராட்டியுள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருந்து செயல்பட்ட கட்டார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானியையும் அவர் பாராட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்தின் பொறுப்பதிகாரியுடனான சந்திப்பின் போதே, வெளிவிவகார அமைச்சர் இந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ரபா கடவை
ரபா கடவை திறக்கப்பட்டதில் 11 இலங்கையர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் காசாவில் இருந்து எகிப்தை சென்றடைந்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் விடுவிக்கப்படுவதற்கு கட்டார் வழி வகுத்ததாகவும் இது தொடர்பில் கட்டார் மேற்கொண்ட வெற்றிகரமான மத்தியஸ்த முயற்சிகளுக்கும் அலி சப்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரபா கடவையை கடந்த 11 இலங்கையர்கள், இலங்கையை சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்த தரப்பினருக்கும் இதன் போது அவர் நன்றி தெரிவித்துள்ளார்.