அரசியலில் கொதிநிலை - தென்னிலங்கையில் உருவெடுக்கவுள்ள புதிய சக்திகள்
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கூட்டணிகள் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்குள் பிளவு நிலை உக்கிரமடைந்துள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதம் புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 அரசியல் கட்சிகள் இப்புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கட்சிகள் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்ற போதிலும் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கிக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களும் இந்தப் புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன முன்னணி மாநாட்டில் கூட்டணிக் கட்சிகள் பங்குபற்றவில்லை. இதன் மூலம் ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் பிளவுநிலை வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம ஆகியோர் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியை சம்பிக்க ரணவக்க கோரியதாகவும் அதற்கு சஜித் இதுவரையில் உரிய பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகள் குறித்து சிறுபான்மை கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில சிறுபான்மை கட்சிகள் புதிய அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படும் வரை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
