யாழ். மாநகர சபை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
யாழ்ப்பாண கலாசார நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கலாசார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வின் நன்றியுரை வழங்குவதற்கு யாழ். மாநகர முதல்வருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அமைச்சர் ஒருவர் வேண்டுமென்றே மாற்றியிருக்கிறார் என அறிய வருகிறது.
யாழ்ப்பாண கலாசார நிலையம்
நிகழ்வொழுங்கில் யாழ். மாநகர முதல்வருக்குப் பதிலாக நன்றியுரைக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உரித்தாக்கும் இந் நிகழ்வில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவின் தகவல் - ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் கலாநிதி எல். முருகன், இலங்கையின் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் “யாழ்ப்பாண கலாசார நிலையம்” இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கப்படவுள்ளது.
இந்த “யாழ்ப்பாண கலாசார நிலையம்” யாழ்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தில் இந்திய அரசாங்கத்தின் முற்றும் முழுதுமான நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப கட்டத்தில் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், இதன் நிர்மாணப் பணிகளின் முடிவில் அதன் நிர்வாகத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் யாழ். மாநகர சபையின் இயலுமையைக் காரணங்காட்டி அதனை மத்திய புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு வந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வுக்கான சகல ஒழுங்குகளையும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வடக்கு மாகாண சபையுடனேயே இணைந்து மேற்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபை புறக்கணிப்பு
யாழ்ப்பாண கலாசார நிலையத்தை முகாமை செய்வதற்கான பங்காளர்களுள் ஒருவராக யாழ். மாநகர சபையும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நிகழ்வு ஏற்பாடுகளில் யாழ். மாநகர சபை முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் கூட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவருடைய பெயரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பில், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கடுமையாகத் தனது விசனத்தை வெளிப்படுத்திய பின்னரே, திரைநீங்கம் செய்யப்படவிருக்கும் நினைவுக் கல்லில் யாழ். மாநகர முதல்வரின் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, யாழ். மாநகர முதல்வர் நிகழ்வொழுங்கின் நன்றியுரையை வழங்கவும் ஏற்பாடாகியிருந்தது.
எனினும் இன்று காலை, அதிபரின் யாழ். விஜயம் குறித்த ஏற்பாடுகளுக்கான முன்னாயத்த மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து யாழ். மாநகர முதல்வருக்குப் பதிலாக நன்றியுரைக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.