அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான சுற்றறிக்கை
நாட்டிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாதாந்த உதவித்தொகை
இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
இது தவிர, உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குநர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.
வரவு செலவுத் திட்டம்
இந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடு, இந்த வருடத்தில் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் நிர்வாகச் செலவுகளில் இருந்து செய்யப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பொறிமுறையின் பிராந்திய மையங்களான பிரதேச செயலகங்களை வலுவூட்டும் நோக்கில் இந்த விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |