மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர்! திருப்பி அனுப்பட்ட தமிழ் எம்.பிக்கள்(காணொளி)
சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கும் மயிலத்தமடுவின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய கள விஜயம் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசார கஜேந்திரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு செல்வதற்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இன்று(15) காலை மட்டக்களப்பில் இருந்து பண்ணையாளர்களுடன் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் அப்பகுதி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கின்ற காவல்துறை காவலரணுக்கு அருகாமையில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து அப்பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை.
வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிபர் செயலாளரிடம் தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்த நிலையில் குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் விஜயம் செய்தார்.
இதன் போது சற்று குழப்ப நிலை உருவாகியது அதன் பிற்பாடு குறித்த இடத்தில் இருந்து திரும்பி செல்வதற்கு முன்னர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூச்சலிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திவுலபத்தனை பகுதியை கைப்பற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முயற்சி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணம்
இந்த விடயம் தொடர்பில் அதிபர், பிரதமர், சபாநாயகர், காவல்துறை மா அதிபர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திவுலபத்தனை பகுதிக்கு இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணம் செய்திருந்தார். இவர் வடக்கு மாகாணத்திலுள்ள எமது இராணுவ வீரர்களுக்கு எச்சரிப்பு விடுத்த ஒரு நபர்.
குருந்தூர் மலை விவகாரத்தில் அவர் சிங்கள மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று திவுலபத்தனை பகுதிக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்தார்.
காணிகளை அளவிடவா அல்லது இனவாதத்தை தூண்டவா இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என நான் வினவினேன்.
இவ்வாறாக எமது பகுதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா எனும் கேள்வி எனக்கு தற்போது எழுந்துள்ளது.
திவுலபத்தனைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஏன் வந்தார்? அவரது பயணத்தின் நோக்கம் என்ன? இது எமக்கு தெரியாது.
தமிழ் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சிங்கள மக்களால் நெருக்கடிகள் ஏற்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்ல முயற்சிக்கிறார்.
இனவாதத்தை தூண்டும் ஒரு நபர்
இலங்கை நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், சிங்கள மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு உணவளிப்பதற்காக பாடுபடுகிறார்கள். இவ்வாறான சிங்கள மக்களுக்கு ஆதரவளிக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திவுலபத்தனை பகுதிக்கு வந்திருந்தால், மக்கள் அவரை மலர் மாலை அணிவித்து வரவேற்றிருப்பார்கள்.
எனினும், அவர்களை விரட்டி குறித்த இடத்தில் தமிழ் மக்களை குடியேற்ற அவர் முயற்சித்தால் அதனை நாம் எதிர்ப்போம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்டும் ஒரு நபர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனினும், குறித்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் விடமாட்டோம்.
பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்தும் போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி, உலகுக்கு தவறான செய்திகளை அனுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றக்கோரி கடந்த 90 நாளுக்கு மேலாக போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.