"நான் யாரையும் வெட்ட மாட்டேன்" பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர் (புதிய காணொளி)
நான் யாரையும் வெட்ட மாட்டேன். எனது தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கூறிய இனவாத கருத்துக்கள் தமிழ் சமூகத்திடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கருத்துக்கள் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியவையாக காணப்படும் நிலையில், அவரது இனவாத கருத்துக்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இனவாத கருத்துக்கள்
தேரரின் இந்த கருத்து பாரதூரமானது என தெரிவித்து அவரை கைது செய்யுமாறு பல முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவரது இனவாத கருத்துக்கள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தான் மிகுந்த வேதனையில் இருந்ததன் காரணமாக இவ்வாறு பேசியதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் அம்பிட்டிய தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எமது ஊடகத்திற்கு தெரிவிக்கையில்,
மட்டக்களப்பில் பல தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
இவ்வாறு மன்னிப்பு கோருவதில் எந்த தவறும் இல்லை. நான் கோபம் காரணமாக வெளியிட்ட கருத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிக்கின்றார்கள்.
நான் எனது கோபத்தை வெளிக்காட்டியமைக்கான காரணத்தை கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது தாயின் சமாதி உடைக்கப்பட்டுள்ளது.
எனது தாய் மாத்திரமின்றி, மேலும் பல சிங்களவர்களின் சமாதி குறித்த மயானத்தில் உள்ளது. இதனை செய்தது யார்? யாரையும் குறை கூறுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.
என்னை தாக்க முயற்சிப்பது தவறு
காவல் நிலையத்தில் நாம் மேற்கொண்ட முறைப்பாடுக்கு தீர்வு கிடைக்காத நிலையிலேயே, நான் மயானம் உள்ள இடத்துக்கு சென்றேன். அங்கு நான் வெளியிட்ட சில கருத்துக்களை வைத்து என்னை தாக்க முயற்சிப்பது தவறாகும்.
இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் எனது தாயின் சமாதியை உடைத்ததை ஒப்புக் கொண்டார்கள். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரினார்கள்.
இந்த நிலையில், நானும் எனது தவறுக்கு மன்னிப்பு கோரினேன். இரு தரப்பினரும் இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் நான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன்.
நான் யாரையும் வெட்ட மாட்டேன்
எனினும், இந்த மயான பூமியில் எனது தாயின் சமாதி இல்லை என கூட்டமைப்பின் உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறுகிறார். அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் என்பதே தற்போது எனது பிரச்சனை.
நான் யாரையும் வெட்ட மாட்டேன். என்னால் வெட்டவும் முடியாது. அந்த கூற்று நான் கோவத்தில் கூறியது. எனது கருத்துக்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் நான் கவலையடைவதாகவும் நீதிமன்றில் கூறியிருந்தேன்.
அத்துடன், இந்த சம்பவத்தில் நான் தமிழ் மக்களையும் ஏசவில்லை. கடமை தவறிய காவல்துறையினர் மீதான எனது அதிருப்தியை வெளியிட்டிருந்தேன்.
எனது கூற்றுக்களை சாணக்கியனின் ஊடகங்கள் தவறான முறையில் செய்தியாக்கியிருந்தன. இவ்வாறான தரப்பினருக்கு எதிராகவே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.