அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இதுவரை சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்
மட்டக்களப்பு வாழ் சிங்களவர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டிய மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அண்மை நாட்களில் தமிழர்களுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு, அவர்களை வெட்டுவதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன், சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைகளை காவல்துறையினர் எதிர்க்காமை குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், காவல்நிலையத்துக்கு சென்று குழப்ப நிலையையும் உருவாக்கியிருந்தார்.
இந்த நிலையில், அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, குறித்த தேரருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக தமது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையினரை எதிர்த்து குரல் எழுப்பிய அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக, காவல்துறையினரால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமை குறித்து தாம் கவலையடைவதாகவும் தனுக்க ரணன்ஞக தெரிவித்துள்ளார்.