அமெரிக்காவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு :22 பேர் பலி
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுமார் 60 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென லூயிஸ்டன் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
உள்ளூர் உணவகம், மதுபான விடுதி உட்பட மூன்று பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது புகைப்படம் லூயிஸ்டன் காவல்துறையினரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஆயுதம் ஏந்திய ஆபத்தானவர் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், ரொபர்ட் கார்ட் தொடர்பான தகவல்களை வழங்குமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு வளையம்
குறித்த நபர் இன்னும் காவல்துறையிடம் சிக்காத காரணத்தால் மெய்ன் நகரம் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரொபர்ட் கார்ட் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால், உடனடியாக காவல்துறையினரிடம் அறியப்படுத்துமாறு பொது மக்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 25 ஆயிரத்து 198 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.