ரணிலின் அமெரிக்க விஜயம் : எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு வெளியான பதில்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றவே அன்றி நாட்டின் மீதுள்ள அன்பினால் அல்ல என அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைவர்
அதேவேளை, அதிபர் ரணிலின் அமெரிக்க விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஏனைய உலக வல்லரசுகளுடன் நிலவும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது எனவும் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களுக்கு உதவிகளை வழங்குவதாக உலக வங்கியின் தலைவர் அதிபரிடம் தெரிவித்ததாகவும், இந்த வருட இறுதிக்குள் உலக வங்கியின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.