முன்கூட்டியே பொதுத் தேர்தல் : நாட்டில் ஏற்படப்போகும் களேபரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முன்கூட்டி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டில் அரசியல் அமைதியின்மையை உருவாக்கும், அதன் இறுதி முடிவு தொங்கு நாடாளுமன்றமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்க தேரர்களை நேற்று(29) சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது
“பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது, இது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும். முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடந்தால், இலங்கையில் அரசாங்கம் சம்பாதித்த ஸ்திரத்தன்மைக்கு ஒரு திருப்பம் ஏற்படும். ” என அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க் கட்சிகளில் சிலர் கூட முன்கூட்டிய பொதுத் தேர்தலை ஆதரிப்பதாகவும் விஜேவர்தன கூறினார்.
ரணிலின் திட்டம்
அரசியலமைப்புக்கு அமைவாக முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையாகும். விக்ரமசிங்க பொது வேட்பாளராகப் போட்டியிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி அல்லது தேசிய மக்கள் சக்தியோ (என்பிபி) ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இல்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |