பிறந்த குழந்தையை காட்ட மறுக்கும் வைத்தியசாலை : நீதவான் விடுத்த உத்தரவு
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ (DNA) பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச(Aruna Buddhadasa) இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமது குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியபோது, வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வைத்தியசாலைக்கு வந்த நீதவான்
மாத்தறை(matara) பிரதான நீதவான் அருண புத்ததாச வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த உத்தரவை வழங்கினார்.சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். மதுஷானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தையை பெற்றெடுத்தார், ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோருக்கு சந்தேகம்
ஆனால் குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் உள்ளது. இதற்குக் காரணம், மருத்துவமனை அதிகாரிகள் தங்களது சிசுவின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருப்பதும், இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருவதும்தான்.
குழந்தை இறப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறை என்ன என்று மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரிடம் வினா எழுப்பப்பட்டது அங்கு, இறந்த உடலை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து ஒரு மருத்துவமனை கண்டிப்பாக பெற்றோரிடம் சம்மதம் கேட்கும் என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தை பற்றிய தகவல்களை இந்தப் பெற்றோரிடம் இருந்து வைத்தியசாலை அதிகாரிகள் மறைத்தனரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |