பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது
துபாயில் பதுங்கியிருந்த நாட்டின் பிரதான பாதாள உலக தலைவன் என கூறப்படும் ஹினாதயான மகேஷ் நமட்டவின் உத்தரவின் பேரில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர்கள் மூவரைக் கொல்லத் தயாரான பாதாள உலகக் குற்றவாளி ஒருவர் ஆயுதங்களுடன் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'மினுவாங்கொட கியா' என அழைக்கப்படும் இந்த குற்றவாளி ஹினாதயான மகேஷின் பிரதான சீடன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
3.8 மி.மீ ரக கைத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்பட்ட 2 தோட்டாக்கள், 9 மி.மீ ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 06 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசேட சுற்றிவளைப்பு
நீர்கொழும்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் காமினி ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் மேற்பார்வையில் நீதி நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த பாதாள உலக பலம் கொண்ட நபர் மற்றும் ஆயுதங்கள் கைது செய்யப்பட்டன.
பாதாள உலகக் குற்றவாளியிடம் விசாரணை நடத்திய போது, துபாயில் இருக்கும் ஹினாதயான மகேஷின் அறிவுறுத்தலின் பேரில் மினுவாங்கொடையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மூவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தில் வியாபாரம் செய்து வந்த மெண்டிஸ், சுரங்க மற்றும் மற்றுமொரு நபரை கொலை செய்ய அவர் தயாராக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகொலை திட்டங்களுக்கான காரணங்கள்
கப்பம் செலுத்தாமை மற்றும் நீண்டகாலமாக நிலவி வரும் பாதாள உலக சண்டைகளே இந்த படுகொலை திட்டங்களுக்கு முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த பாதாள உலக குற்றவாளி அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் ஹினாதயான மகேஷின் அறிவுறுத்தலின் பேரில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |