ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை இந்திய இராணுவமே சிதைத்தது : நுஃமான்
ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை இந்திய இராணுவமே சிதைத்தது என பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் சர்வதேச ஆய்வரங்க மாநாட்டில் இன்று(30) கருத்துரை வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஆனைக்கோட்டை ஆதிமனிதனது எச்சம் வடபகுதி தொல்லியல் ஆய்வுகளில் முக்கியமானது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகழ்வில் கிடைத்த அடையாளம்
அந்த அகழ்வின் போது கோவத்தை எனும் முத்திரை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முத்திரையில் வடிவம் பூகோளமயமாதலும் புதிய தேசிய வாதமும் என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தில் காணப்படுகிறது.
தமிழ் சமூகத்தின் வணிக குழுமத்தைச் சேர்ந்தவராக ஆனைக்கோட்டை ஆதிமனிதன் இருக்கலாம் என்று ஐயப்பாடும் இருக்கிறது.
பொதுவாக இந்திய இராணுவம் இலங்கையில் படுகொலை செய்தது எனும் விடயத்தையே தமிழர் தரப்பினரால் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மிகப் பெரிய ஒரு வரலாற்று அடையாளத்தை ஆயுத முனையில் இந்தியப் படையினர் அழித்துள்ள விடயத்தை பேராசிரியர் நுஃமானின் இந்தக் கூற்று மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.
வரலாற்று அழிப்பு
ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிகளில் தான் இருந்ததாகவும் 20 வருடங்களுக்கு அதிகமாக யாழ்ப்பாண நூலகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் பாதுகாத்து வந்த இந்த வரலாற்று அடையாளம் பின் நாளில் இந்திய இராணுவத்தினரால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் நுஃமானின் கூற்றுக்கு ஏற்புடையதாக, பூகோளமயமாதலும் புதிய தேசிய வாதமும் என்ற புத்தகத்திற்கு(எழுதியவர் - மு. திருநாவுக்கரசு) நிலாந்தன் முன்னுரை எழுதுகின்ற போது இந்த எச்சத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.