விலங்குகள் சுதந்திரமாக வாழ இடமளிக்கப்பட வேண்டும்- மஹேல ஜயவர்தன
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தனித்து போன காட்டு யானையை தொந்தரவு செய்யும் காணொளி சம்பந்தமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன (Mahela Jayawardene) விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
காட்டில் இருந்து வீதிக்கு வந்த காட்டு யானையை தொந்தரவு செய்து மகிழும் காரில் செல்லும் ஒரு நபர், அது தொடர்பான காணொளியை டிக் டொக்கில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அந்த நபர் யானையின் முகத்திற்கு நேராக காரின் விளக்குகளை ஒளிரச் செய்து அதனை பயமுறுத்துகிறார்.
இந்த டிக் டொக் காணொளியை மேற்கோள்காட்டி பதிவை இட்டுள்ள மஹேல ஜயவர்தன, "இப்படியான சம்பவம் நடந்திருப்பது முதல் முறையாக அல்ல. அப்பாவி விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் அவற்றை கேலிக்கு எடுத்துக்கொண்டு மேற்கொள்ளும் இப்படியான நடத்தைகளை நிறுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. இந்த விலங்குகள் சுதந்திரமாக வாழ இடமளிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பிரபல ஹொலிவூட் திரைப்பட நடிகர் லியனாடோ டிகெப்ரியோ, இலங்கையில் காட்டு யானைகளுக்கு ஏற்படும் துயரமான நிலைமையை குறித்து தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
இலங்கையில் மனிதர்கள் தூக்கி எறியும் மக்காத குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு செல்லும் காட்டு யானைகள் அவற்றை உண்டு மரணிப்பது தொடர்பான விடயத்தை அவர் உலகத்திற்கு கூறியிருந்தார்.
Not the first time this has happen in SL and it’s time we stop this playful behaviour.. let the animals live peacefully. https://t.co/hJScE7XY5t
— Mahela Jayawardena (@MahelaJay) February 4, 2022