தேவைப்பட்டால் கோட்டாபயவின் பயணத் தடையை நீக்குங்கள்! சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணையில் முன்னாள் கோட்டாபய ராஜபக்ச இன்னும் சந்தேக நபராகப் பெயரிடப்படாத நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், தேவைப்பட்டால் அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (21) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து நீதவான் இன்று வினவினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன என்பவரின் கையொப்பத்துடன் கூடிய மனுவொன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவிக்கையில், “இலங்கையில் பலருக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
சிங்கப்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்வதற்கே குறித்த மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாய்மொழியாக அறிவித்தேன். இந்த விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறைபாடுகள் காணப்பட்டதால், நீதிமன்றப் பதிவாளர் அந்த மனுவை நிராகரித்ததாக நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |