கொரோனா பெருந்தொற்று - யாழ் பல்கலை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
கொரோனா பெருந்தொற்று அபாயம் காரணமாக பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது பணியாளர்களினை பணியிடங்களுக்குச் செல்லாது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது என பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன் துணைவேந்தருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெரும் அபாயமாக மாறிவரும் கொரோனா பெருந்தொற்று சூழலில் யாழ் பல்கலைக்கழக பணியாளர்களினை பெருந்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக பணியாளர்கள் பணிக்கு வருதல் தொடர்பில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரதும் கருத்துக்கள் அறியப்பட்டு அதனடிப்படையில் இன்று (12.08.2021) வியாழக்கிழமை, பணியாளர்கள் அனைவரும் பணியிடங்களிற்குச் செல்லாமல் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்று (12.08.2021) நிர்வாகத்தினருடன் கலந்துரையாட விரும்புகின்றோம். எங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை வரை நடமாடித் திரிந்த ஒரு ஊழியர் கொரோனாவால் மரணமடைந்த நிலையிலும்., கிளிநொச்சி வளாகம், விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், துணை மருத்துவ கற்கைகள் பீடம், இந்து கற்கைகள் பீடம், இராமநாதன் மண்டப நிர்வாக தொகுதி, பராமரிப்பு கிளை, பாற்பண்ணை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையிலும் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எவ்வித பொறுப்புமற்று பணிக்கு வரும் நிலையிலும், ஏற்பட்டுள்ள அபாய நிலையை கருத்தில் கொண்டு இவ் அவசர முடிவை எடுக்க நேரிடுகிறது.
இவ்விடயங்கள் கொரோனா பாதுகாப்புக்குழு தலைவர் மருத்துவர் சுரேந்திரகுமார் அவர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளது.