பேராதனைப் பல்கலை தமிழ்ச் சங்கத்தின் வருடந்த குறிஞ்சிச்சாரல் பெருவிழா!
பெருமையும் செழுமையும் மிக்கதாய் விளங்கிடும் பேராதனைப் பல்கலைக்கழமானது இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகமாக விளங்குகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகமானது, பல்கலைக்கழகக் கல்லூரியாக இருந்த காலத்திலேயே 1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தைக் காட்டிலும் அகவைகள் கடந்ததாய் தனது நூற்றாண்டு விழாவினை நோக்கி வீறுநடை போடுகின்றது.
அந்த வகையில் தமிழர் தம் கலைகளையும் பெருமைகளையும் வளர்த்தெடுப்பதற்காய் ஆண்டு முழுவதுமாய் அழகுதமிழ் செய்து மற்றைய பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் தனித்துவமாய்த் தமிழ் வளர்ப்பதோடு, இன்னும் பிற பல சமூகச் செயற்பாடுகளிலும் சரித்திரம் படைத்தவண்ணம் வீறு நடைபோடுகின்றது.
பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்
ஆக, மாதரே, புதுவசந்தம், நாடகத்திருவிழா, குறிஞ்சிச்சாரல் போன்ற பெருமையுறு கலையுயர் செயற்றிட்டங்களோடு எழுத்தாயுதம், கல்விச்சாரல், மகாவலிக்கரையில், நூலோடு நூலோடி, உதவிக்கரம் நீட்டுவோம், மரநடுகைச் செயற்றிட்டம் என்றவாறு வருடம் பூராகவும் புதுமைகள் செய்யும் சங்கமாய் மார்தட்டிக்கொள்கின்றது பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்.

அந்த வகையில் தமிழூறும் செய்தி தரணியெல்லாம் சேர பேராதனைப் பல்கலைக்கத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் நடாத்துகின்ற பெருவிழாவாக குறிஞ்சிச்சாரல் அமைந்து கொள்கின்றது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தமிழ்நிலமாய்ச் சென்று , அவ்விடத்துப் பிரதேசத்தின் கலைகளோடு எம்மவரும் கூடி தமிழர் தம் கலைகளுக்குப் பெருவிழா எடுப்பது வழக்கம் .
அந்தவகையில் இந்தவருடம் மட்டுநகர் மண்ணில் 16.11.2025 அன்று சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக அரங்கில் வெகுவிமரிசையாக நடைபெறக்காத்திருக்கின்றது.
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி வழங்கும் நாட்டிய நாடகம் , அழகியற் கற்கைகள் பீட மாணவர்கள் வழங்கும் கூத்து , ஒயிலாட்டம் , பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கும் இறையிசைப் பாடல்கள் , குழுநடனம், வில்லுப்பாட்டு, நாடகம் , திரையிசைப் பாடல்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அளவளாவிடும் மக்கள் மன்றம் போன்ற நிகழ்வுகளோடு மட்டுநகர்தன்னில் மகிழ்ந்தாடக் காத்திருக்கின்றோம்.
அத்தோடு மட்டக்களப்பு மண்ணில் தமிழ்ப்பணி செய்திட்ட ஆளுமைகளுள் ஒருவருக்குச் சங்கச்சான்றோர் விருதினையும் வழங்கிக் கெளரவிக்கவுள்ளோம்.
ஆக தங்களது ஊடகத்துறையானது எம்மோடு இணைந்து எங்களது நிகழ்வுகளின் தொகுப்பை ஒளிபரப்புச் செய்திடுமாறு தமிழன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
