உலகத் தமிழர் வரலாற்று மைய ஒன்பதாம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம்
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஒன்பதாம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம், (16.02.2025) அன்று உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.
பொதுச்சுடர்களை த.சத்தியவாணி, பத்மினி, சுகன்யா, ஜெசிந்தா மற்றும் அபிராமி ஆகியோர் ஏற்றினார்.
அரசியல் துறை
தமிழீழ தேசியக் கொடியினை முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் போராளி முகுந்தன் ஏற்றினார்.
ஈகைச்சுடரினை பொது மாவீரருக்கான திருவுருவ படத்திற்கு வைத்திய கலாநிதி அருட்குமார் அவர்கள் ஏற்றி வைக்க அக வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தோற்றுவிப்பாளர் அவையின் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில், ஆசியுரையினை அறங்காவலர் சுகந்தகுமார் வழங்க, நோக்க உரையினை ஆலோசனை சபை சார்பாக பாலா மாஸ்டர் வழங்கினார்.
தொடர்ந்து உலக தமிழர் வரலாற்று மையத்தின் மேலாண்மை பணிப்பாளர் வசந்தன் அவர்கள் தலைமை உரையினை ஆற்ற கடந்த வருட செயற்பாட்டு அறிக்கையினை செயலாளர் வினோதன் வாசித்து அளித்தார்.
செயற்பாட்டு அறிக்கை
பொருளாளர் விஜி அவர்கள் கடந்த ஆண்டுக்கான நிதி செயற்பாட்டு அறிக்கையினை வாசித்து அளித்தார்.
தொடர்ந்து உபகட்டமைப்புகளின் பொறுப்பாளர்களாக மாவீரர் பணிமனை சார்பாக அப்பன் மற்றும் பரணி, மக்கள் நலன் காப்பகம் சார்பாக நசீர் மற்றும் செவ்வாணன், அற்புதவிநாயகர் ஆலயம் சார்பாக சுரேஷ் மற்றும் உதயன் அவர்களும், மகளிர் அமைப்பு சார்பாக சுகன்யா, தள அமைப்பு சார்பாக வசந்தன் செயற்பாட்டு அறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கையினை வெளியிட்டு உரையாற்றினர்.
குறிப்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் "தமிழ் இல்ல" கட்டிட நிர்மாணிப்பு பணி தொடர்பாகவும் அதற்கான நிதி சேகரிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அதே போன்று இவ்வருடம் நிறைவுக்கு வந்திருந்த உபகட்டமைப்புகளான மக்கள் நலன் காப்பகத்திற்கு புதிய பொறுப்பாளர்களாக மற்றும் இணைப்பாளராக விசாகன் செயலாளராக தேரகன் உப செயலாளராக நவமணி ஆகியோர் முன்மொழியப்பட்டு சபையினரலால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழர் வரலாற்று
அதேபோன்று அற்புத விநாயகர் ஆலயத்தின் இணைப்பாளராக உதயன், செயலாளராக சோதிதாஸ், பொருளாளராக புண்ணியலிங்கம் முன்மொழியப்பட்டு சபையினரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எதிர்காலங்களில் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகங்களில் இளையோரின் பங்களிப்பும் அவர்களின் நிர்வாக ரீதியான செயற்பாடு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தொடர்ந்து சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரதும் கருத்துக்களும், ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது.
இந்த ஒன்பதாம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டத்தில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தோற்றுவிப்பாளர்கள், அறங்காவலர்கள், நிர்வாக பொறுப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசவிடுதலை
பல போராளிகளினதும் மக்களினதும் அளப்பரிய அர்ப்பணிப்புகளால் இவ் வளாகம் ஆண்டு 10 இல் இன்னும் உறுதியாக தடம் பதித்துள்ள நிலையில், இதற்காக உழைத்த அத்தனை பேரையும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கின்றோம் என உலகத் தமிழர் வரலாற்று மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பெருமண்டப கட்டுமானப் பணிகளுடன் கரம்கோர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசவிடுதலையின்பால் அக்கறைகொண்ட பிரித்தானிய தமிழ் மக்கள் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் எமது தமிழ் உறவுகள் அனைவருக்கும் புதிதாக இணைந்து வரலாற்று மையத்தை பலப்படுத்தி வருவதும் எமக்கு மேலும் உந்துசக்தியை அளிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து தமிழர் போராட்ட வரலாற்றையும், தமிழர் தேசம் சந்தித்த கறைபடிந்த இனப்படுகொலைகளையும் சட்டரீதியான ஆய்வுகள் மூலம் உலகின் கவனத்திற்கு கொண்டுசெல்வதன் மூலம் தமிழர் உரிமைப்போராட்டத்திற்கும், தமிழீழ நாட்டின் விடுதலைக்கும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதில் எமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது என உலகத் தமிழர் வரலாற்று மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கிகாரத்திற்காக இந்த வளாகம் என்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் என உலகத் தமிழர் வரலாற்று மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


