மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தின் விசேட தூதுக்குழுவொன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22.09.2026) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ள இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
குறித்த தூதுக்குழு சவுதி அரேபிய மன்னரை சந்தித்து, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுப்பவுள்ள கடிதத்தையும் கையளிக்கவுள்ளது.

சிவராசா அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக சட்டபூர்வமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளதால், அவரது வழக்குக்காக இதுவரை ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், அவரது குடும்பத்தினரிடமிருந்து மேன்முறையீட்டுக்காக பெறப்பட்ட பணம் மீள வழங்கப்படும் என்றும், சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் இராஜதந்திர வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |