இலங்கை மத்திய வங்கி எதிர்நோக்கியுள்ள மற்றுமொரு சவால்!
அடுத்த மாதத்திற்குள் நிலக்கரியை ஏற்றிய எட்டு கப்பல்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை விடுவிக்கும் சவாலை இலங்கை மத்திய வங்கி எதிர்நோக்கியுள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய அனல் மின் நிலையமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் சிக்கல் இன்றி முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள கோடை காலத்திற்கு முன்பதாக எட்டு கப்பல்களில் வரும் நிலக்கரியை தரையிறக்க வேண்டியுள்ளது.
நிலக்கரியை ஏற்றிய இந்த எட்டு கப்பல்களை அடுத்த மாதம் இலங்கைக்கு வரவழைக்கத் தேவையான வங்கி கடன் பத்திரத்தை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா(Jagath Perera) தெரிவித்துள்ளார்.
எட்டு கப்பல்களில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான சுமார் நான்கு லட்சத்து என்பதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே மின் உற்பத்திக்கு தேவையான 2.25 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரி அனல் மின் நிலையத்தில் கையிருப்பில் உள்ளது. அத்தியவசிய உணவு பொருட்கள், மருந்து மாத்திரமல்லாது எரிபொருளை இறக்குமதி செய்வதிலும் டொலர் பிரச்சினை குறுக்கீடாக உள்ளது.
இவ்வாறான நிலைமையில் நிலக்கரி இறக்குமதி பாதிக்கப்பட்டால், சுமார் தொள்ளாயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்படுமென மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
