இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ள மற்றுமொரு சீனா கப்பல் : உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு !
சீனாவின் சியாங் யாங் கொங் 3 எனப்படும் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு பயணிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சின் பேச்சாளர் கபில பொன்சேகா ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளையும் மீறி, சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 அண்மையில் ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் மற்றுமொரு சீன கப்பல் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாங் யாங் கொங் 3
இதற்கமைய, சீனாவின் சியாங் யாங் கொங் 3 எனப்படும் கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சியாங் யாங் கொங் 3 எனப்படும் ஆய்வு கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது என்பதுடன் 99.06 மீட்டர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும்.
இந்த நிலையில், குறித்த விடயத்தை தற்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கபில பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்த கப்பலின் பயணம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தெரியாதென கூறியுள்ளார்.
சீனாவின் கோரிக்கை
எனினும், இந்த கப்பலின் இலங்கை பயணம் தொடர்பான கோரிக்கை அண்மையில் கிடைக்க பெற்றதாகவும் இதற்கான அனுமதி தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளா்.
அத்துடன், இந்த கப்பல் சிறிலங்கா துறைமுகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பான அனுமதியை வழங்கும் செயல்முறை இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் கபில பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |