22வது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாடாளுமன்றில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிவில் சமூக அமைப்பான 'பஹுஜன பலய' உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தத்தின் விதிகள் அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளனவா என்பதையும், அதில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் மக்களின் அனுமதி பெறப்பட வேண்டுமா என்பதையும் தீர்மானிக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம்
கொள்கையளவில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைத் தமது அமைப்பு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள 'பஹுஜன பலய' அமைப்பு, ஆனால் எந்தவொரு திருத்தமும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த வேண்டும், மக்களின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனக் கட்டுப்பாடுகளையும் சமநிலையையும் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பும் சில விதிகள் குறித்து அந்த அமைப்பு தனது பிரத்தியேக கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
தனது மனுவில், பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கம், LAWASIA, சர்வதேச நீதிபதிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட் உள்ளிட்ட சர்வதேச சட்ட அமைப்புகளும் நிபுணர்களும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் கவலைகளையும் 'பஹுஜன பலய' சுட்டிக்காட்டியுள்ளது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் சட்டமாக இயற்றப்படுவதற்கு முன்னர் விரிவான மற்றும் சுயாதீனமான அரசியலமைப்பு ரீதியான பரிசீலனை அவசியம் என்பதை இத்தகைய கவலைகள் கோடிட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் சரியான அரசியலமைப்பு நடைமுறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் மக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் 'பஹுஜன பலய' வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening