மற்றுமொரு ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் பதவி
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஏழாவது சபையின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நேற்று (08) போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், தலைவராக சமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அதனை உறுதிப்படுத்தினார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வில்
இதன்படி நேற்று ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வில் குழுவினால் முன்வைக்கப்பட்டு முடிக்க முடியாத பல விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆராயப்படவுள்ளதுடன், ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கான செயலமர்வை ஒன்றிணைந்து நடத்துவது குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்றை நடத்தவும் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துயைரயாடலில் இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கட்டகொட, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கோகிலா குணவர்தன, சமன்பிரியா ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாமலுக்கும் புதிய பதவி
இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வதேச உறவுகள் தொடர்பான நாடாளுமன்ற பிரிவு மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
