கணக்கில் எடுபடாத ரணிலின் உத்தரவு! பிணை பெற்ற ஸ்டாலின் கூறும் தகவல்
கணக்கில் எடுபடாத ரணிலின் உத்தரவு
அதிபர் ரணில் விக்ரமசிங்க கோட்டை காவல் நிலையத்தில் இருந்த போது தம்மை தொடர்பு கொண்டு இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லையா என வினவியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அதிபர் பணிப்புரை விடுத்திருந்த போதிலும், காவல்துறையினர் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிணை பெற்ற ஸ்டாலின் கூறும் தகவல்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் செல்பி எடுத்த குற்றச்சாட்டின் பேரில் பல இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களின் தனிப்பட்ட தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள் அவர்களுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்தப்படுகின்றன என அவர் கூறினார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இளைஞர்களை தான் தடுக்கப்பட்ட சிறை அறையில் சந்தித்ததாக ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
