சட்ட மறுப்பு போராட்டம் - இதைத்தான் அரசியல் சூனியம் என்பதா!
இலங்கை ஒற்றையாட்சிச் சட்டங்களை நியாயப்படுத்தக்கூடிய அத்தனை காரியங்களையும் செய்து முடித்துவிட்டு, அரசியல் தீர்வு கிடைக்கவில்லையானால் சட்ட மறுப்புப் போராட்டம் என்று மார் தட்டுவது வேடிக்கையாகத் தெரியவில்லையா?
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டங்கள் மூலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை (Political Emancipation) அடைய முடியாது என்பது தான் தமிழ்த்தேசியத்தின் அடிப்படை.
அதாவது சட்ட மறுப்புப் போராட்டம். ஆனால் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், 'தமிழ்த்தேசியம்' என்ற தூய்மையைத் தமக்குரிய அரசியல் போர்வையாக மாற்றி இலங்கை ஒற்றையாட்சிச் சட்டங்களுக்கு ஏற்ப தமிழ்த்தேசியக் கட்சிகள் செயற்பட்டிருக்கின்றன.
சாதி - சமயச் சர்ச்சைகளும் உருவெடுத்துள்ளன. இலங்கை ஒற்றையாட்சி சட்டங்களை நியாயப்படுத்தக்கூடிய அத்தனை காரியங்களையும் செய்து முடித்துவிட்டு, அரசியல் தீர்வு கிடைக்கவில்லையானால் சட்ட மறுப்புப் போராட்டம் என்று சுமந்திரன் கூறுவதன் அர்த்தம் என்ன? 1920 இல் இலங்கைத்தேசியம் பிளவுபட்டுத் தமிழர் மகா சபை உருவாக்கப்பட்ட நாள் முதல் ஆரம்பித்த இன முரண்பாடு அகிம்சை மற்றும் ஆயுத போராட்டங்களாக மாறி எழுபது வருடங்கள் கடந்துவிட்டன.
சட்டமறுப்பு போராட்டம் தேவைதானா?
அதன் நீட்சியாக 2009 இற்குப் பின்னரான பதின்மூன்று வருடங்களில் இன அழிப்பு என்பதை நிரூபிக்கக்கூடிய முறையில் அமைந்திருந்த ஜனநாயகச் சூழலைத் தமது கட்சி அரசியல், தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டு தற்போது சட்ட மறுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்தட்டுவது வேடிக்கையாகத் தெரியவில்லையா?
தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்வதற்குரிய அமெரிக்க - இந்திய அரசுகளின் ஏற்பாடுகளுக்கும் இலங்கையின் விருப்பங்களுக்கும் மனதார இடமளித்துவிட்டுத் தற்போது சட்ட மறுப்புப் போராட்டம் என்று அதுவும் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் நின்று கோசமிடுவது கோமாளி அரசியல் (Clown Politics) அல்லவா? குடிசார் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானதென ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் அதன் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பதாகும்.
ஜனநாயகச் சூழலில் சட்ட மறுப்பு போராட்ட வடிவம் என்பது ஓர் அறவழிப் போராட்டமாகும். அமெரிக்க எழுத்தாளரான கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau) 1849 இல் எழுதிய Resistance to Civil Government (Civil Disobedience) என்ற அங்கில நூலில் இப்போராட்ட முறைகள் பற்றி விபரிக்கிறார். ஒரு அரசு தனிநபர்களின் அல்லது ஒரு சமூகத்தின் உள்ளுணர்வுக்கும் அதனுடைய மனச்சாட்சிக்கும் எதிராகச் சட்டம் இயற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், அரசின் அநீதிகளுக்கு எதிர்ப்புக் காட்டாமல் துணை போவதைத் தவிர்ப்பது ஒருவரின் கடமை எனவும் தூரோ தனது நூலில் இடித்துரைக்கிறார்.
இயற்கை நோக்கரின் கருத்து
ஆனால் 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் செயற்பாடுகளுக்குத் துணைபோய்விட்டுத் தற்போது சட்ட மறுப்புப் போராட்டம் என்கிறார் சுமந்திரன். மனட்சாட்சிக்கு மாறான அரசின் சட்டங்களுக்குத் துணைபோவது அரசியல் விடுதலைப் போராட்டம் ஒன்றுக்குத் தீங்கிழைக்கும் என்ற அர்த்தத்தை தூரோ வெளிப்படுத்துகிறார்.
இவர் ஒரு இயற்கை நோக்கர் (Transcendentalist) இவருடைய குடிசார் சட்ட மறுப்பு வழிமுறைகளை நெல்சன் மண்டேலா தென்ஆபிரிக்க அரசியல் விடுதலைக்காகப் பயன்படுத்தியிருந்தார். தமிழ்த்தேசியக் கட்சிகள் இழைத்த அநீதிகளுக்குச் சில உதாரணங்கள்,
அநீதிகளின் சான்று
1) காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல் போன்ற இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் பலவற்றைத் தடுக்க நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்கின்றமை.
2) ரணில் - மைத்திரி அரசாங்கத்தை 2015 இல் உருவாக்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்கி ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையைப் பிணை எடுத்தமை.
3) பொங்கு தமிழ் போராட்டத்தின் பெயரை எழுக தமிழ் என்றும் பி2பி எனவும் பெயர் மாற்றியமை.
4) அபிவிருத்தி என்ற பெயரில் வடக்குக் கிழக்கில் அதிபர், பிரதமர். அமைச்சர்கள் ஆகியோரின் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்குகெடுப்பது. மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை அமைக்கத் தமது சொந்த அரசியல் நோக்கில் ஒத்துழைப்பது.
5) அதிபர் தேர்தலைத் தவிர வேறு அனைத்துத் தேர்தல்களிலும் தமது கட்சி அதிகளவு ஆசனங்களைப் பெறக்கூடிய வியூகங்களை மாத்திரம் வகுப்பது. அதற்குள் சிலர் தங்கள் தனிப்பட்ட வெற்றிக்காக உழைப்பது.
6) வவுனியா கொக்கச்சான் குளத்தை ”போபஸ்கம” என்ற சிங்களப் பெயருக்கு மாற்றி மூவாயித்து ஐநூறு சிங்களக் குடும்பங்களை மகிந்த குடியேற்றியிருந்தார். அதற்குக் காணி உறுதி வழங்கும் ரணிலின் அரசியல் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பங்குகொண்டமை.
7) புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாத்திரம் கருத்திடுவது.
