மீண்டுமொரு இரகசிய இன அழிப்பிற்கு தயாராகிறதா அநுர அரசு : சபையில் சிறீதரன் கேள்வி
வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது தமிழ் மக்கள் மீது மீண்டும் நீங்கள் நிகழ்த்தும் ஒரு இரகசியமான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ரீதியான யுத்தம் என்று தான் நான் நினைக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்யைில், ”யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுடைய காணிகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தல் கோரப்பட்டிருப்பது அந்த மக்களை பொறுத்தவரை மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல்.
யுத்தம் நடந்த பிற்பாடு அவர்கள் இருக்கும் போதே தையிட்டியில் விகாரை கட்டி அந்தக் காணியை தருமாறு கோருகின்ற சூழலில், இன்று நாவற்குழியில் காணியைப் பிடித்து விகாரை கட்டியிருக்கின்ற சூழலில் இராணுவ முகாம்களுக்கு வழங்க முன்னெடுக்கின்றீர்கள் என்ற அச்சம் தோன்றியிருக்கின்றது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை கூடுதலாக மையப்படுத்திய வகையிலேயே அங்கிருக்கின்ற பெருமளவான ஏக்கர் காணிகளை என்ன தேவை என்பதற்கு ஒரு மறைமுகமான கருத்தியலுடன் அந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கும் அதன் உரிமையாளர்கள் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் நாங்கள் ரத்து செய்வோம் என்ற அடிப்படையில் தான் வந்திருக்கின்றது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
