ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள சஜித்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காத அநுர அரசாங்கம் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ (Kesbewa) பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மேடையில் கூறியவற்றை நடத்திக் காட்டுவதில் தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளார்.
எரிபொருள் விற்பனை
துறைமுகத்திலிருந்து ஒரு விலைக்கு எரிபொருள் இறக்கப்பட்டு, மற்றொரு விலைக்கு மக்களுக்கு விற்கப்படுகிறது. அதிக வரி, ஊழல், மோசடி, திருட்டு போன்ற காரணங்களே இதற்குக் காரணமாகும்.
எனினும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் கூறிய எரிபொருள் மோசடியை நிறுத்த முடியாது போயிருக்கின்றது. கனியவள கூட்டுத்தாபனத்தில் நடந்த ஊழல்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று அந்த நிறுவனத்துக்கு ஜனாதிபதி நியமித்த புதிய தலைவர் கூறுகிறார்.
அரச ஊழியர்களின் சம்பளம்
நிதியமைச்சின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விலையைக் குறைக்க முடியும். எரிபொருள் விலை குறைந்தால் நாடு வங்குரோத்தடைந்து விடும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறும்போது, ஜனாதிபதி அநுர உட்பட ஜே.வி.பி.யின் முன்னணி தலைவர்கள் பொய்களைக் கூறித் திரிகின்றனர்.
அதேநேரம், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காத இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்களுக்கு வேதன அதிகரிப்பை வழங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |