ஜனாதிபதிக்கான அதிகார அதிகரிப்பு: அதிக ஆர்வம் காட்டும் அநுர
ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மிக விரைவில் அரசியலமைப்பில் திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர அவர்கள் உத்தேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய நிலையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரம் பெற்றே நியமனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அரசியலமைப்புப் பேரவை
இந்தநிலையை மாற்றி ஜனாதிபதிக்குத் தேவையானவர்களை குறித்த பதவிகளில் நேரடியாக நியமிக்கத் தக்க வகையில் அல்லது அரசியலமைப்புப் பேரவையில் ஜனாதிபதிக்குத் தேவையானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் வகையில் குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமையவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் நெருங்கிய நண்பர் ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நியமித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்திருந்தது.
சுயாதீனக் குழு
இதன் காரணமாகவே அரசியலமைப்புப் பேரவை மற்றும் ஏனைய சுயாதீனக் குழுக்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அவற்றை ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதற்கான அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் விரைவில் உருவாக்கப்படவுள்ளது.
அது தொடர்பில் அரசியலமைப்பு நிபுணர்கள் பலருடன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
