அனுரவின் பிள்ளையை கிள்ளு; தொட்டிலை ஆட்டு டெக்னிக்!
திருமலை கடற்கரை அடாவடி புத்தர் சிலை வழக்கு அதிர்வுகள் மற்றும் அனுரவின் கடந்தவார யாழ்பாண உரையின் பின்னணில் தெற்கில் மீண்டும் பௌத்த உசுப்பேற்றல் கொக்கரிப்புகள் ஒலிக்கின்றன.
திருமலை கடற்கரையில் ஒரு கூல்பார் வியாபாரியாகவும் அதேவேளை பலாங்கொட கஸ்ஸப தேரர் என்ற அடையாளத்திலும் அர்த்தநாரியாக இருக்கும் பிக்கு உட்பட்ட நான்கு பிக்குகளும் அவர்களின் மத அரசியல் அல்லக்கைகளும் இன்று திருமலை நீதிமன்றத்துக்கு மீண்டும் செல்லப்பட முன்னரே அதன் முன்றலில் அட்மிரல் சண்டிய வீரசேகர வகையாறாக்கள் குவிந்திருந்தனர்.
15 வருடங்களுக்கு முன்னர் இதேபோல அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தமிழர்களுக்கு சார்பாக செயற்படாமல் தனது ஐ.நா நிபுணர் குழுவைக்கொண்டு விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் இல்லையேல் உண்ணாநிலையிருந்து சாவேனே தவிர மீளேன் இது சத்தியம் என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச சில மணிநேரத்தில் தனது பட்டினி மரணத்தை தவிர்க்க மகிந்த கையால் இளநீர் அருந்தி தனது நாடகத்தை முடித்தார்.
15 வருடங்களுக்கு பின்னர் இதே விமல் ..அடடா ஆச்சரியக்குறி என்ற வகையில் அனுர அரசாங்கத்தின் கல்விச்சீர்திருத்தை எதிர்த்து பிரதமர் ஹரிணி தனது கல்வியமைச்சர் பொறுப்பில் இருந்து விலகும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் என்ற நாடகத்துக்கு சீன் இழுத்தார்.
ஆனால் என்னே ஆச்சரியம்! அந்த சாகும் வரை உண்ணாநிலை நாடகம் திடீரென சத்தியாக்கிரக போராட்டமாக மாற்றப்பட்டது. மீண்டும் அடடே என்ன ஆச்சரியம் அதுவும் சில மணிநேரத்தில் முடிக்கப்பட்டது.
அதன்பின்னர், திருமலைக்கு விரைந்த விமல் அங்குள்ள சிறையில் தன்னைப்பொலவே ஒரு உண்ணாவிரத நாடகம் போட்ட கஸ்ஸப தேரின் இன்னொரு உண்ணாவிரத நாடகத்தை முடிக்க அதே பிக்குகளுக்காக இன்னொரு நாடகத்தை திருமலை நீதிமன்ற முன்றலில் கடும் போக்குவாதிகள் நடத்தினர்.
இந்த நாடகங்களுக்காக திருமலை பிரட்டரிக் கோட்டை வாசலில் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சட்டவிரோத கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதாக விடயம் கூட தூக்கிப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாடகங்களுக்குள் தையிட்டி சட்டவிரோத விகாரை விடயத்தில் அனுர அரசாங்கம் செய்யும் அரசியல் நாடகம் இப்போது கரும்பு தின்ன கூலியா வேண்டும் என்பதுபோல தெற்கில் பௌத்த உசுப்பேற்றல்களை ஒலிக்க வைக்கும் நிலையில் இந்த விடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |