மகிந்தவின் வங்கிகணக்கில் பண மோசடி - எதிரணி எம்.பி வெளியிட்ட புதிய தகவல்
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனது செயலாளருக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) நடவடிக்கை எடுக்காதது குறித்து தாம் ஆச்சரியப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake ) தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து மில்லியன் கணக்கான ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பிரதமர் ராஜபக்ச, அரச வங்கியொன்றில் பராமரிக்கப்பட்டு வரும் தனது வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கான ஏடிஎம் அட்டையை அந்த நபருக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜபக்ச அரச தலைவராக இருந்தபோது அவருக்கு சம்பளம் கிடைத்த இந்தக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க, நிதி மோசடி தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை காவல்துறையிடமோ அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்திலோ முறைப்பாடு செய்யவில்லை. மேலும் நிதி மோசடியை ஒரு நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு பிடி தண்ணீர் எடுப்பதற்கு ஒப்பிட்டார்,
திருடப்பட்ட பணம் வங்கிக் கணக்கில் குவிக்கப்பட்ட மொத்தத் தொகையுடன் ஒப்பிடுகையில் ஒன்றும் இல்லை என்று கூறினார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன( Eran Wickramaratne), இந்த சம்பவத்தில் உண்மை இருக்குமானால் அது பிரதமர் மற்றும் அரசாங்கத்தை சுற்றியுள்ளவர்களின் தன்மையை காட்டுகிறது என்றார்.
