இலங்கையில் அடுத்த தேர்தல்: இந்திய துணை ஜனாதிபதியிடம் அநுர வழங்கிய உறுதிமொழி
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், வடக்கு - கிழக்கின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை - இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
சந்திப்பில் கலந்துகொண்டோர்
மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்படும் நிலையில் தேர்தலை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமாரவுடனான சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.
அச்சமயத்தில் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தினார்.” என தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் புளொட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |