சிறையில் லொஹான் ரத்வத்தவினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை - தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்
அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஒரு துப்பாக்கியை சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய தமிழ் கைதிகளை மிரட்டுவது என்பது ஒரு மிகப் பாரதூரமான சம்பவம் என நான் நம்புகின்றேன்.
இலங்கை சரித்திரத்திலே மிக பாரதூரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஏற்கனவே சிறைச்சாலையில் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இப்படியாக ஒரு அமைச்சர் நேரடியாகச் சென்று வன்முறைகளில் ஈடுபடுவது என்பது இதுவே முதல் தடவையாகும். மிக கண்டிக்கப் படவேண்டிய விஷயம்.
நான் மிக வன்மையாக கண்டிப்பது மாத்திரமல்ல இது சம்பந்தமாக அரசாங்கம் உடனடியாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் பயங்கரமான செயற்பாடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.