புதிய சாதனை படைத்த அப்பிள் நிறுவனம் - பங்கு சந்தையில் அசுர வளர்ச்சி
உலகம் முழுவதும் பிரபலமான அப்பிள் நிறுவனம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட்டிருக்கிறது.
இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை. இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறி, இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் அப்பிள் உயர்ந்திருக்கிறது.
சந்தை மதிப்பு
நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டொலர் என்ற அளவில் முடிவடைந்ததன் மூலம், அதன் சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட முடிந்தது.
மேலும் ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட போகும் "அப்பிள் விஷன் ப்ரோ" என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பயன் அடைந்திருப்பதாக பங்குசந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
3 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பீட்டை தொட்ட முதல் நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், 2018-ம் வருடம் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பை அடைந்ததும், அதன்பின் 2020-ல் 2 டிரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை தொட்டதும், அப்பிள் ஏற்கெனவே எட்டிய மைல் கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.