இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - கிளம்பியது கடும் எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு
இன்றையதினம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (08) கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு, பாரிய அமைச்சரவை நியமனத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,
நாடு பாரியளவில் வங்குரோத்து நிலையிலும், வாழ்க்கைச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்துள்ள வேளையிலும், அரசாங்கம் தன்னிச்சையாகவும் ஒழுக்கக்கேடாகவும் 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளது.
நாடு தாங்காது
இத்தருணத்தில் இந்த பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை நாடு தாங்க முடியாது என்றும் அது இந்த நாட்டை மேலும் அதலபாதாளத்திற்கு தள்ளும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகிறது.
அரசு பழைய வழியில் செல்கிறது என்பதே இதன் உட்பொருள்.
அதன்படி, இன்று (08) கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று சபை இந்த பாரிய அமைச்சு சபையை நியமித்தமைக்கு ஏகமனதாக ஆட்சேபனையை நிறைவேற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.