அரச சேவையில் 3 பதவிகளுக்கான புதிய நியமனங்கள் : கிடைத்தது அனுமதி
இலங்கையின் அரச சேவையில் மூன்று சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைக் குறிப்பிட்டார்.
எனினும், குறித்த நியமனங்கள் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித பெர்னாண்டோவை (K.H.P Palitha Fernando) வெற்றிடமாகவுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான, ஆர்.ஏ. சந்தன சமன் ரணவீர ஆராச்சி (R.A Chandana Saman Ranaweera) காணி ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விவசாய சேவையின் விசேட தர அதிகாரியான கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி. எதிரிமான்னவை (E.R.S.P Edirimanne) விவசாய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |