விடுமுறை நாளிலும் தபால் ஊழியர்களுக்கு வேலை...வெளியானது அறிவிப்பு!
பொது விடுமுறை நாளிலும் தபால் ஊழியர்கள் கடமையில் ஈடுபட இணங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார (K. W. Shantha Bandara) தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாளாக இருந்தாலும், அன்றைய தினம் தபால் ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்ற இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனை, பாரிய அளவிலான பொருட்களை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தபால் பரிவர்த்தனை
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"அஞ்சல் துறைக்கும், மத்திய தபால் பரிவர்த்தனைக்கும் வரலாற்றில் அதிக அளவில் பொருட்கள் கிடைத்த ஆண்டாக இந்த ஆண்டு (2024) அமைந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் நம் நாட்டில் உள்ள உறவினர்களுக்கு அதிக அளவில் பொருட்களை பொதிகளாக அனுப்பியுள்ளனர்.
சுங்க அதிகாரிகள்
அந்தப் பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு அனுப்புவது நமது பொறுப்பாக இருக்கின்ற அதே நேரம் வருடத்தில் வரும் நீண்ட விடுமுறை நாட்களாக இவை அமைந்துள்ளதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால்மா அதிபர் வழங்கிய அறிவுரையின் படி அனைவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி பணியில் ஈடுபடுவார்கள் என்றும் இதற்கு சுங்க அதிகாரிகளும் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்'' எனவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |