ஏப்ரல் 21 தாக்குதல் : உண்மையை மறைக்கும் முக்கிய தரப்பு - கேள்வியெழுப்பும் எம்.பி
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதன் உண்மையான சாட்சியங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுக்கும் பிரதான தரப்பு யார்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் (Nizam Kariapper) கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (23.07.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கையைக் கோடிட்டுக் காட்டி அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல்
இதன்படி, குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கோ அல்லது அவர்களைக் கைது செய்வதற்கோ இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள்
அதேநேரம், 2018ஆம் ஆண்டு வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் களவாடப்பட்டமை தொடர்பில், 2015ஆம் ஆண்டே இராணுவத்தின் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான தகவல்களுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் ஏப்ரல் 21 தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவ்வாறான புலனாய்வு அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
