திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி : பக்தர்கள் கடும் விசனம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் மின்பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை வர்த்தக நிலையம் நடத்த வழங்குமாறு ஆலய நிர்வாகத்திற்கு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த அத்துமீறிய செயற்பாடு தொடர்பாக தெரியவருவதாவது,
திருக்கோணேஸ்வரம் ஆலய சூழலில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை அமைத்தவரின் வர்த்தக நிலையம் நிர்வாக சபையினரால் 7 மாதங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது .
தொல்பொருள் திணைக்களத்திடம் பாரப்படுத்திய காவல்துறை
இது தொடர்பாக,அவர் நிர்வாக சபைக்கு எதிராக காவல்துறையிலும், தொல்பொருள் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.இந்த நிலையில் காவல்துறையினரால் இந்த விவகாரம் தொல்பொருள் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது .

தொல்பொருள் திணைக்களம் ஆலய பகுதியில் வர்த்தக நிலையம் அமைக்க தாம் அனுமதி வழங்கியுள்ளதால், அவர் அதனை அமைக்க நிர்வாக சபையினர் மின்பிறப்பாக்கி வைத்துள்ள பகுதியை வழங்கும்படி நவம்பர் 7ஆம் திகதியிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
எதற்கும் அனுமதி வழங்காத தொல்பொருள் திணைக்களம்
ஆலய வளாகத்தில் காண்டாமணி பொருத்த ஒரு மணிக்கோபுரம் அமைக்க நிர்வாகசபை அனுமதி கேட்டும் தொல்பொருள் திணைக்களம் அனுமதியளிக்காத நிலையில், நிர்வாக சபை மின்பிறப்பாக்கிக்கு கூரை அமைக்க விண்ணப்பித்தும் அனுமதி வழங்காத நிலையில்,

இடிந்து விழும் நிலையிலுள்ள கோணேஸ்வர வாகன தரிப்பிடத்தை செப்பனிட அனுமதி கேட்டும் அதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், ஆலய பூசகரின் தங்குமிடத்தை சிறிது விரிவுபடுத்துவதற்கு அனுமதி தரப்படாத நிலையில்,
தனிப்பட்ட நபர் கோயில் வளாகத்தில் கட்டடம் அமைக்க தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமை குறித்து ஆலய பக்தர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |