பட்டப்படிப்பு தொடர்பில் பேரணியில் மௌனம் காத்த நாமல் ராஜபக்ச!
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தனது பட்டப்படிப்பு குறித்து தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பல சர்ச்சைகளை உருவாக்கிய நாமல் ராஜபக்சவின் பட்டப்படிப்பு தொடர்பில் நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் விளக்கத்தை வழங்குவதாக கடந்த 19 ஆம் திகதி புதன்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும், நேற்றைய தினம் (21.11.2025) ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து நுகேகொடை பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுப்பேரணியில் நாமல் ராஜபக்ச தனது பட்டப்படிப்பு தொடர்பான எந்தவொரு விளக்கத்தையும் முன்வைத்திருக்கவில்லை.
நாமலின் பட்டப்படிப்பு
இவ்விடயம் தற்போது சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 19 ஆம் திகதி புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல், "இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு B அறிக்கையை சமர்ப்பித்து, எனது பட்டப்படிப்பு தொடர்பில் விசாரிக்க ஒப்புதல் பெற்றது.
அதன் பிறகு, பல மாதங்களாக விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்று வரை, நீதிமன்றத்திற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இப்போது, அவர்கள் நுகேகொட பேரணியைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார்கள். இந்த அவதூறுகள் அனைத்திற்கும் 21 ஆம் திகதியன்று பதில் அளிக்கப்படும்." என தெரிவித்திருந்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக சேவை செய்யாவிடின் அரசாங்கத்தை கவிழ்க்க தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் (21.11.2025) பேரணி மேடையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |