இடிந்து விழுந்த மந்திரிமனையை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
யாழ். (Jaffna) நல்லூர் தொல்பொருள் சின்னமான மந்திரிமனையை இன்று (18.09.2025) காலை பார்வையிட்ட சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றைய தினம் மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
சில தனி நபர்களின் நீதிமன்ற வழக்குகள்
அந்த பகுதியை பார்வையிட இன்று (18) காலை வந்திருந்தோம். மிக முக்கியமானதும் மிக கவலையான விடயமும், இந்த மந்திரிமனை என்பது தமிழர்களின் வரலாற்று தொன்மையான இடம் இதனை பாதுகாத்து புனரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த போதும், ஒரு சில தனி நபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இழுபறி நிலையிலே காணப்பட்டது.
இந்தக் கட்டிடத்தை புனரமைத்து இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீக அடையாளமாக நிலை நிறுத்துவதற்கு உரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறது.
அதன் அடிப்படையில் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள மந்திரிமனை யாழ்ப்பாணம் மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதற்குரிய ஆலோசனைகளை பெற்றுள்ளேன்.
இந்த மந்திரி மனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
