கனடாவில் இருந்து வந்த சகோதரியை ஏமாற்றிய தங்கை - பின்னர் நடந்த விபரீதம்
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் நேற்று(21) தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தலைமுடியைக் கத்தரித்த அக்கா மீது தங்கை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காவல்துறையில் முறைப்பாடு பதிவு

கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பமாக வந்த நிலையில், தனது தாலிக்கொடி மற்றும் தங்கச்சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ள போது தங்கை தாலிக்கொடியை மாத்திரமே கையளித்துள்ளார். சங்கிலி தொடர்பில் கேட்ட போது , ''சங்கிலி தரவில்லை தாலிக்கொடி மாத்திரமே தந்தாய்'', என தங்கை கூறியுள்ளார்.
அதனால் அக்கா - தங்கை மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குடும்பிபிடி சண்டையாக மாறியுள்ளது. அதன் போது தங்கையின் முடியை அக்கா கத்தரித்துள்ளார். அதனை அடுத்து , கத்தரிக்கப்பட்ட தனது தலைமுடியுடன் காவல்நிலையம் சென்ற தங்கை, அக்கா மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.