குடிபோதையில் பணியாளரின் கையை கடித்த பயணி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
விமானத்தில் பயணித்த பயணியொருவர் விமான பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி கையை கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி, ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம்159 பயணிகளுடன் புறப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த 55 வயது பயணி ஒருவரே இவ்வாறு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளார்.
விமானத்தில் வாக்குவாதம்
விமானத்தில் பயணித்த இவர் திடீரென எழுந்து விமான பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பணியாளரின் கையையும் கடித்துள்ளார்.
இதில், பணியாளருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் சிறிது நேரம் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தினால், விமானத்தில் பயணித்தவர்களின் பாதுகாப்பை கருதி மீண்டும் விமானம், ஜப்பானின் டோக்கியோ நகருக்கு திருப்பி விடப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணை
அந்த விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியதை தொடர்ந்து காவல்துறையினரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் “நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை ” என அவர் கூறியுள்ளார்.
அந்த பயணி குடிபோதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |