தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரன்-மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் தொடர்பிலான பிணைமுறி மோசடி வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த முடிவினை இன்று அறிவித்துள்ளது.
ரணில்-மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்காவின் கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவிவகித்த அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி விவகார வழக்கில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும் அவர் கடந்த 04 வருடங்களாகத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய ஸ்ரீலங்காக் காவல்துறையினர் சர்வதேச காவல்பிரிவின் உதவியை நாடியுள்ளதுடன், கைது முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2016ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது ஸ்ரீலங்கா பணப்பெறுமதியில் 11 பில்லியனுக்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இதுகுறித்த விசாரணை கொழும்புமேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பிணை முறி வழங்கல் செயற்பாட்டில் முறைப்படி அனுகுமுறைகள் பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டினால் இலங்கை மத்திய வங்கிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது உறவினரான பேர்ப்பச்சுவல் டிரசரீஸின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட போதிலும் இதுவரை அர்ஜுன மகேந்திரன் தலைமறைவாகியிருப்பதால் அவர் இல்லாமலேயே மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கொழும்புமேல் நீதிமன்றம் இன்றைய தினம் வழங்கியுள்ளது.