பிரதேச சபை பெண் உறுப்பினர்களை தாக்கும் பாணியில் சென்ற அர்ச்சுனா : வேடிக்கை பார்த்த காவல்துறை
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும்,பிரதேசசபை பெண் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்தில் கூடியிருந்த உறுப்பினர்கள் அர்ச்சுனாவை நோக்கி எழுப்பிய கேள்விகளால் குறித்த வாக்குவாதம் வலுத்துள்ளது.
மரியாதையுடன் கதைக்க கற்றுக்கொள்ளுங்கள்
இதன்போது அங்கு கூடியிருந்த பெண் உறுப்பினர்கள் அர்ச்சுனாவை நோக்கி, “நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் முதலில் மரியாதையுடன் கதைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
தையிட்டி தொடர்பில் இங்கு கருத்து தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை. தையிட்டி கதை தையிட்டியுடன். சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் அரசியல் செய்து வாழாதீர்கள்” என கடுமையாக விமர்சித்திருந்தனர்
இது தொடர்பில் கடும் தொனியில் கருத்து வெளியிட்ட அர்ச்சுனா, "தையிட்டியில் போராட்டம் செய்கின்ற கூட்டம் நீங்கள் தான். இருந்து குளறுங்கள்" என்று கூறி பெண்கள் என்று கூட பார்க்காமல் அநாகரிகமான சொற்களால் அவர்களை திட்டினார்.
தவிசாளர் மீதும் தகாத வார்த்தை
இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள் "சேர் நீங்கள் மரியாதையாக பேசுங்கள், என்று கூறி விவாதித்தபோது அவர்களை தாக்குகின்ற பாணியில், குரலை உயர்த்தி மிரட்டியவாறு அருகே சென்றதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும் ஐந்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த இடத்தில் நின்றபோதும் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெசீதனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |