விடுதலையான அரசியல் கைதிகளுக்கு யாழில் இராணுவத்தளபதி‘அட்வைஸ்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட 15 அரசியல் கைதிகளும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த கூடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக இவர்கள் செய்த தவறை அரசாங்கம் மன்னித்துள்ளதாகவும் அவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூறினார்.
விசேடமாக விடுதலை பெற்று வெளியே வந்துள்ளவர்கள், வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திவிட வேண்டாம். சிறந்த பிரஜைகளாக இருந்தாலும் கடந்த காலத்தில் தவறான வழிகளில் சென்றிருக்கலாம். இருப்பினும் தற்போது சரியான வழியில் பயணித்து மற்றவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணத்தை அளித்தால் நல்லது.
புனர்வாழ்வு பெற்று சமுகத்தில் வந்தவர்கள் சிறந்த பிரஜைகளாக இருப்பதால் தடுப்பிலுள்ள மற்றவர்களின் விடுதலைக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். யாழ் மாவட்டத்திற்கு சிறந்த பயனை நீங்கள் அளிக்க வேண்டும்.
போரில் நீங்களும் உயிர்பிழைத்தது கடந்த காலத்தில் நீங்கள் செய்திருக்கும் புண்ணியமாகும். ஸ்ரீலங்கா படையினரால் உங்களுக்கு தேவைப்படுகின்ற உதவிகளை செய்வதற்கும் தயாராக உள்ளோம். நீங்கள் எமது நாட்டுப் பிரஜைகள்.
ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக நீங்கள் போராட்டம் செய்திருந்தாலும் அவற்றை நாங்கள் மன்னிக்கின்றோம். எமது சகோதரரர்களாகவே பார்க்கின்றோம்.
எனவே சிறந்த புனர்வாழ்வைப் பெற்றிருப்பதால்தான் விடுதலையை பெற்றிருக்கின்றீர்கள். கடந்த கால நினைவுகளை மறந்து புதிய வாழ்வைத் தொடங்குங்கள் என்றார்.