ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு
ஈரானியக் கப்பல் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை ஈரான் கண்டித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் அழைத்து உரையாடியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
அதன்போது, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ரஷ்யாவிற்கான அனைத்து ஆதரவுகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல்
அராக்சியுடனான உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஹா, "எந்தவொரு பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன். இந்தப் போர் சட்டவிரோதமானது, இது முடிவுக்கு வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல் தற்செயலானது என்றும், உக்ரைன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் சிபிஹா தனக்கு உறுதியளித்ததாக அராக்சி எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானுக்கு உரிய இழப்பீடு
மேலும், “ஈரானும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. இருப்பினும் எங்கள் குடிமக்கள் அல்லது நலன்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இந்த இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.
கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது என அராக்சி முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு மாற்றியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |