விவசாய நிலங்களுக்குள்ளும் கால் பதிக்கிறது சிறிலங்கா இராணுவம்
எதிர்வரும் யால பருவத்தில் (மார்ச்-செப்டம்பர்) விவசாயிகளுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவதற்காக நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு வயல் மற்றும் விளைநிலங்களுக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் அனுப்பப்படுவார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) தெரிவித்தார்.
நாட்டின் விவசாயத்தை உயர் மட்டத்திற்கு உயர்த்துவதற்கு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட பணிப்புரையின் பேரில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த இராணுவத் தளபதி, அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள முகவர் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி (ஒருங்கிணைத்து) உரம் வழங்குவது முதல் அறுவடை வரை விவசாயிகளுக்கு உதவுவது இந்த இராணுவ அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சவேந்திர சில்வா கூறினார்.
கொவிட் தடுப்பூசியின் போது வழங்கியதைப் போன்று நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு இராணுவம் அதிகபட்ச பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான சகல ஆலோசனைகளையும் அரச தலைவர் தமக்கு வழங்கியுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
