கொழும்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலை
கொழும்பில் முன்னிலை சோஷலிச கட்சியினர் நேற்று (20) முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 33 பேரும் இன்றைய தினம் (21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொம்பனித்தெரு காவல்துறையினர், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மரணப் பொறியை முறியடிப்போம், வரிச்சுமை, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி, குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்திற்கு தடை
குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், அந்தக் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நிராகரித்தார்.
இந்த நிலையில், முன்னிலை சோஷலிச கட்சியின், மக்கள் போராட்ட அமைப்பு நேற்று கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்திருந்தது.
33 பேர் கைது
எனினும், ஆர்ப்பாட்ட பேரணி புறக்கோட்டை பகுதியை நோக்கி பயணித்த போது, அதற்கு காவல்துறையினால் தடையேற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அமைதியின்மை ஏற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தையும் நடத்தியிருந்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 2 பிக்குகள் உள்ளிட்ட 33 பேரை காவல்துறையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |